எகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரகவாசிகளா??? புது சர்ச்சையை கிளப்பியிருக்கும் எலான் மஸ்க்!!!

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

 

விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எலான் மஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புதிய கருத்தைப் பதிவிட்டு இருக்கிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. எகிப்து பிரமிடுகளைக் கட்டியது வேற்றுகிரவாசிகள்தான்… இது மனிதர்களின் படைப்பல்ல… என்பதைக் கூறும் சில அறிவியல் பூர்வமற்ற கருத்துகள் உலகம் முழுவதும் ஒரு சிலரால் பகிரப்பட்டு வருகிறது. அத்தகைய கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் “கண்டிப்பாக பிரமிடுகளை கட்டியது வேற்று கிரகவாசிகள்தான்” என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு  பதிலளித்துள்ள எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ரணியா அல்மஷாட் “பாராட்டு மிக்க உங்கள் பணிகளை நான் பின்தொடர்ந்து வருகிறேன். பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றிய விளக்கங்களை ஆராயவும் பிரமிடுகளை கட்டியவர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் நான் உங்களுக்கும் ஸ்பேஸ் எக்ஸுக்கும் அழைப்பு விடுகிறேன். மஸ்க், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று பதில் அளித்திருக்கிறார்.

இதைத்தவிர எபிக்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாஹி ஹவாஸ் மஸ்க்கின் வாதம் ஒரு “முழுமையான மாயை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பிரமிடு கட்டியவர்களின் கல்லறைகளை நான் கண்டேன் பிரமிடுகளை கட்டியவர்கள் எகிப்தியர்கள், அவர்கள் அடிமைகள் அல்ல என்று அவை அனைவருக்கும் சொல்கிறது” என அவர் கூறியதாக எகிப்தின் டுடே செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த வாதங்கள் அனைத்தும் டிவிட்டர் பக்கத்திலேயே நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.