துருவ் விக்ரம் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 23 2023]

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ’வர்மா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம், மீண்டும் வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் ஆதித்ய ’வர்மா’ என்ற பெயரில் படமானது.

இதனை அடுத்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ’மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அவரது பிறந்த நாளை அடுத்து அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கபடி விளையாட்டு கதையம்சம் குறித்த இந்த படம் துருவ் விக்ரம் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.