தோனி 100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு… நிராகரிக்க கோரிய மனுவில் நீதிபதி அதிரடி!
- IndiaGlitz, [Friday,December 10 2021] Sports News
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சென்னை சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்துவரும் தோனி கடந்த 2014 இல் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் கூறியதை அடுத்து பரபரப்பு கிளம்பியது.
இதனால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டிய தோனி, இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதன் செய்தி ஆசிரியர், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோரிடம் 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் தோனி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கை தள்ளுபடி செய்யமுடியாது. ஒருவேளை அப்படி தள்ளுபடி செய்தால் முதன்மை வழக்கில் தாமதம் ஏற்படும் என்றும் இதனால் சாட்சி விசாரணையை எதிர்கொள்ளுமாறு சம்பத்குமாருக்கு பரிந்துரை செய்து வழக்கை விசாரித்த நீதிபதி சேஷாசாயி தள்ளுபடி செய்துள்ளார்.
முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து கடந்த 2016 – 17 ஆம் ஆண்டுகளில் சென்னை சிஎஸ்கே, ஐபிஎல் அணிகளில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே வீரர்கள் வேறு அணிகளில் இணைந்து விளையாடினர். அந்த வகையில் மகேந்திர சிங் தோனி பூனே அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.