டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வா??? மனேஜர் அளித்த பரபரப்பு விளக்கம்!!!
- IndiaGlitz, [Friday,July 10 2020]
இந்தியக் கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக இருந்து வரும் டோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார். அதற்கு அடுத்து டி20 போட்டிகளில் கலந்து கொள்வார் என்று இந்திய ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் டி20 போட்டிகள் காலவரையே இல்லாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் எப்போது டோனியின் மறுபிரவேசம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் டோனியின் எதிர்காலத் திட்டம் என்னவாக இருக்கும் என்று அவருடைய நண்பரும் மேனேஜருமான மிஹிர் திவாகர் சில தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். “நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல் போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப் படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும் தெரியும். தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே பேணி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார். தற்போது எவ்வளவு வேகமாக இயல்பு நிலை திரும்புகிறது என்பதைப் பொறுத்தே எல்லாம் அமையும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
தற்போது கொரோனா பரவல் காலத்தில் தன்னுடைய பண்ணை வீட்டில் தங்கியுள்ள டோனி இயற்கை சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதுகுறித்த சில புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. டோனிக்கு தற்போது 39 வயது பிறந்து விட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா சீக்கிரம் முடிவுக்கு வரவேண்டும். டோனியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.