தோனி அவுட் இல்லை: வைரலாகும் சிறுவனின் கதறி அழும் வீடியோ

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தோனியும், வாட்சனும் போட்டியை முடித்துவிடுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் திடீரென தோனி ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த ரன் அவுட்டின் முடிவை எடுப்பதில் 3வது அம்பயர் நீண்ட நேரம் எடுத்து கொண்டார். பந்து ஸ்டம்பை அடிக்கும்போது ஒரு கோணத்தில் தோனி பேட்டை வைத்துவிட்ட மாதிரியும் இன்னொரு கோணத்தில் பேட் நூலிழையில் வெளியே இருப்பது போன்றும் தெரிந்தது. எனவே நீண்ட ஆலோசனை செய்த அம்பயர் பின்னர் அவுட் என்ற முடிவை எடுத்தார்.

பொதுவாக இதுபோன்ற குழப்பமான நேரத்தில் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக முடிவு வழங்கப்படும். ஆனால் நேற்று தோனிக்கு எதிரான ஒரு முடிவை அம்பயர் எடுத்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது.

இந்த நிலையில் தோனி அவுட் என அறிவிக்கப்பட்டதும் மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சிறுவன் 'தோனி அவுட் இல்லை' என கதறி அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகிறது.