தில்லுக்கு துட்டு 2 : நான்ஸ்டாப் காமெடி
சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே டீம் மீண்டும் இணைந்து உருவாக்கிய இந்த 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
மருத்துவமனையில் வேலை செய்யும் மாயாவிடம் (ஷராதா ஷிவதாஸ்} யாராவது 'ஐ லவ் யூ' சொன்னால் உடனே அவரை காவல் காக்கும் பேய் அடிச்சு தூக்கிவிடும். மாயா வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பேயிடம் அடிவாங்குகிறார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளை விஜி (சந்தானம்) மீது கடுப்பில் இருக்கும் அந்த டாக்டர், விஜியை பழிவாங்க மாயாவிடம் லவ் வர செய்கிறார். மாயாவில் காதலில் விழும் விஜி, ஐ லவ் யூ சொல்ல, மாயாவை காவல் காக்கும் பேய்க்கும், சந்தானத்திற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் என்ன? அதன் முடிவு என்ன? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
அய்யப்ப பக்தராக அறிமுகமாகும் காட்சியில் இருந்து, 'என்னை ஒழிச்சிடலாம் நினைச்சிங்க, அது முடியாது, நான் ஜெயிச்சிட்டேன்' என்று கிளைமாக்ஸ் முடிந்ததும் பேசும் வசனம் வரை சந்தானம் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு காமெடியும் கவுண்ட்டரும் செம காமெடி. ஒரு காமெடிக்கு சிரித்து முடிவதற்குள் இன்னொரு காமெடி, அதையடுத்து மற்றொரு காமெடி என நான்ஸ்டாப் காமெடி வெர்ஷன் சந்தானத்திற்கு கிளிக் ஆகிவிட்டது. மொத்த படத்தையும் சந்தானம் தனது காமெடி நடிப்பால் தோளில் சுமந்து சென்று படத்தை கரையேற்றுகிறார்.
நாயகி ஷராதா ஷிவதாஸ் கேரக்டருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் அவருடைய ஃபேமிலி லுக், அவருக்கு இன்னும் வாய்ப்புகளை பெற்று தரும்
ஹீரோவுக்கு இணையான காமெடி நடிகராக கடந்த பல ஆண்டுகளாக சந்தானம் நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாகிவிட்டதால் மொட்டை ராஜேந்திரன் அந்த இடத்தை பிடித்துவிட்டார். சந்தானம் காமெடிக்கு இணையாக சிரிப்பை வரவழைக்கும் மொட்டை ராஜேந்திரனுக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸில் மந்திரவாதியும் மொட்டை ராஜேந்திரனும் மாறி மாறி கதவை திறக்கும் காட்சிக்கு யாராவது சிரிக்காமல் இருந்தால் அவர்களது மனநிலையில் தான் சந்தேகம் வரும்
பெண் சாமியாராக வரும் ஊர்வசிக்கு சின்ன கேரக்டர் என்றாலும் அவருடைய காமெடியும் செமயாக அமைந்துள்ளது. மூன்று பேய்களுடன் நடந்து செல்லும்போது அவரது நடிப்பில் அனுபவம் தெரிகிறது.
ஷபீரின் இசையில் 'மவனே யாருகிட்ட' பாடல் மட்டுமே ஓகே ரகம். ஒரு காமெடி படத்திற்கு தேவையான பின்னணி இசை. தீபக் குமாரின் ஒளிப்பதிவு, மாதவன் மதுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றது.
இயக்குனர் ராம்பாலா லாஜிக் பார்க்காமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் திரைக்கதை அமைத்துள்ளார். ஹீரோவின் பில்டப் அறிமுக காட்சி, ஹீரோவுக்கு அறிமுக பாடல், தேவையில்லாத சண்டைக்காட்சி என படத்தை இழுக்காமல் காமெடியை மனதில் வைத்து படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதி காமெடி எக்ஸ்பிரஸ் ஆகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் கிளைமாக்ஸ் பேய் பங்களா காட்சி வந்தவுடன் படம் வேகமெடுக்கின்றது. ஆலுமா டோலுமா, பாகுபலி, எந்திரன், என ஆங்காங்கே பல படங்களின் ரெஃப்ரன்ஸ்களும் உண்டு. பொதுவாக தமிழில் வெளிவந்த பெரும்பாலான இரண்டாம் பாக படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த படம் அந்த பட்டியலில் சேராமல் நிச்சயம் வெற்றி அடையும் வகையில் இயக்குனரின் உழைப்பு உள்ளது.
மொத்தத்தில் கவலையை மறந்து மனம்விட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமென விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்.
Comments