தெலுங்கு சினிமாவில் நடிகர் தனுஷ்… புது அப்டேட் குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்!

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட்டில் வரவேற்பை பெற்று இருக்கிறார். அதையடுத்து “தி க்ரே மேன்” எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டு, தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் “டி43” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்தப் படப்பிடிப்பு தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தனுஷை பிரபல தெலுங்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்தித்தாகவும் இந்தச் சந்திப்பின்போது 2 தெலுங்கு சினிமாவில் நேரடியாக நடிப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் விரைவில் வெளியிடுவார் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தெலுங்கில் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் இயக்குநர் சேகர் கம்முலாவையும் தயாரிப்பாளர் நாராயணன் தாஸ் நரங்கையும் சந்தித்துப் பேசினார் என்றும் தெலுங்கு ஊடகங்களில் அறிவிப்பு வெளியாகியது.

இதைத்தவிர தெலுங்கில் “தொழி பிரேமா“, “ரங் தே“ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரியும் நடிகர் தனுஷை சந்தித்துப் பேசினார் என்றும் அவருடன் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு, தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் 3 மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ஒன்றில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் தற்போது தெலுங்கு ஊடகங்களில் பரபரப்பை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் தோழா படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியின் அடுத்த படத்தில் அவர் நடிக்க தளபதி விஜய் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தற்போது நடிகர் தனுஷ் நேரடியாகத் தெலுங்கில் 2 படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“கர்ணன்” வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ், கார்த்திக் நரேனின் “டி43“ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தானு அவர்கள் தயாரிக்கும் “நானே வருவேன்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் நேரடியாக கால்பதிக்க இருக்கிறார்.