தனுஷின் 'தங்கமகன்' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Thursday,December 10 2015]
தனுஷ் நடித்த தங்கமகன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் சற்று முன்னர் இணையதளங்களில் 'தங்கமகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது 'விஐபி' போலவே இந்த படத்திலும் காதல், குடும்ப செண்டிமெண்ட், சோகம், மோதல் என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் கலந்து இருப்பது தெரிய வருகிறது.
விடலைப்பருவ கெட்டப்பில் வரும் தனுஷ், சதீஷுடன் இணைந்து எமிஜாக்சனை விரட்டி விரட்டி காதல் செய்வது, பின்னர் சமந்தாவுடன் குடும்பத்தலைவராக இன்னொரு கெட்டப்பில் தோன்றுவது, ஜெயப்பிரகாஷுடன் ஏற்படும் ஆக்ரோஷமான மோதல் என இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த டிரைலரில் உள்ள வசனங்களும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் என்ற கேரக்டரில் நடித்துள்ள தனுஷ், 'ஜெயப்பிரகாஷிடம் 'தமிழை யாராலும் அழிக்க முடியாது' என்று அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக கூறும் வசனமும், 'தமிழ்நாட்டுல இங்கிலீஷ் தோக்கலாம், பிரெஞ்ச் தோக்கலாம், கொரியன் தோக்கலாம், ஜப்பானீஸ் தோக்கலாம், இட்டாலி தோக்கலாம், ஸ்பானிஷ் தோக்கலாம், ஜெர்மன் தோக்கலாம், ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் தோக்கவே முடியாது' என்ற வசனமும் படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
தனுஷ், சமந்தா, எமிஜாக்சன், சதீஷ், ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'வேலையில்லா பட்டதாரி' பட இயக்குனர் வேல்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. குமரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.