நான்கு தெலுங்கு பட நிறுவனத்துடன் தனுஷ் ஒப்பந்தமா?
- IndiaGlitz, [Monday,September 13 2021]
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அது மட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிவரும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நான்கு தெலுங்கு படத்தில் நடிக்க ஒரு சில நிறுவனங்களுடன் தனுஷ் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தாரா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்திலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களும், அதனை அடுத்து மைத்ரு மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தளபதி விஜய் தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ள நிலையில் தனுஷ் தொடர்ச்சியாக சேகர் கம்முலா படம் உள்பட 5 தெலுங்கு பட நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.