ஒரு பக்கம் தலைவர் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா வீடு.. 16 வயதில் போட்ட விதை.. தனுஷ்..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

போயஸ் கார்டனில் ஒரு பக்கம் தலைவர் ரஜினிகாந்த் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா அம்மா வீட்டை 16 வயதில் பார்த்ததாகவும், அப்போதே இந்த போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற விதை தனது மனதில் எழுந்தது என்றும் நடிகர் தனுஷ் ’ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

’ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் தனுஷின் பேச்சு ஹைலைட் ஆக இருந்தது. அவர் இந்த விழாவில் பேசிய போது ’போயஸ் கார்டனில் நான் வீடு வாங்கியது இவ்வளவு பெரிய பேசுபொருளாக மாறும் என்று தெரிந்திருந்தால் ஒரு சின்ன அப்பார்ட்மெண்டில் இருந்திருப்பேன். ஏன் நான் எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா? தெருவில் இருந்தால் தெருவில் தான் இருக்க வேண்டுமா?

இந்த போயஸ் கார்டன் வீடு வாங்கியதில் ஒரு சின்ன கதை இருக்கிறது. எனக்கு ஒரு 16 வயது இருக்கும்போது நானும் என் நண்பனும் பைக்கில் போய்க்கொண்டிருந்தபோது தலைவர் வீட்டை பார்க்க வேண்டும் என்று நினைத்தோம். அப்போது சிலரிடம் விசாரித்து தலைவர் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டபோது போயஸ் கார்டனில் இருக்கிறது என்று சொன்னார்கள்.

இதனை அடுத்து நானும் எனது நண்பனும் போயஸ் கார்டன் சென்று தலைவருடைய வீட்டை பார்த்தோம். அப்போது எங்களுக்கு பெரிய மன திருப்தி ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பக்கமாக வந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வீட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. அது யாருடைய வீடு என விசாரித்த போது தான் ஜெயலலிதா அம்மா வீடு என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு பக்கம் தலைவர் ரஜினிகாந்த் வீடு, இன்னொரு பக்கம் ஜெயலலிதா அம்மா வீட்டை பார்த்ததும், ஒரு நாள் இந்த போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்று 16 வயதில் ஒரு சின்ன விதை என் மனதில் எழுந்தது. அந்த விதை இன்று 20 வருடங்கள் உழைத்த சம்பாத்தியத்தில் பெரிய மரமாகி உள்ளது என்று பேசினார். தனுஷின் இந்த பேச்சை அவரது பெற்றோர்கள் மற்றும் மகன்கள் கைதட்டி ரசித்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.