சாகசங்களுக்கு தயார்: டூப் இல்லாமல் போர்க்காட்சிகளில் நடிக்கும் தனுஷ் பட நாயகி..
- IndiaGlitz, [Monday,February 12 2024]
தனுஷ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தான் நடிக்கும் அடுத்த படத்தில் போர் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து சாகசங்களுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடித்த ’வாத்தி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் தற்போது ’சுயம்பு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை பரத் கிருஷ்ணாச்சாரி என்பவர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் நிகில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நிகில் ஒரு போர் வீரனாக நடித்து வருவதாகவும் தற்காப்பு கலைகள் பயின்ற, குதிரை சவாரியில் தீவிர பயிற்சி உடைய, போர்க்களத்தில் சாகசங்கள் செய்யும் ஒரு வீரராக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா மேனனும் சில போர் காட்சிகளில் நடித்து வருவதால் அவர் தற்போது குதிரை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நான் நடிக்கும் ’சுயம்பு’ என்ற படத்திற்காக தற்போது குதிரை சவாரி கற்று வருகிறேன். இந்த புதிய பயணம் எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி கற்று வருகிறேன். இதை நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவது மிகவும் அழகாக உள்ளது. குதிரையில் இருந்து கீழே விழும் ஒவ்வொரு அனுபவத்தையும் நான் தடையாக எடுத்துக் கொள்ளாமல் அதை ஒரு படியாக எடுத்துக் கொள்கிறேன். விரைவில் ஒரு குதிரை ஜாக்கியாக நான் மாறுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை சம்யுக்தா மேனனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.