'தொடரி' திரைவிமர்சனம் : தடம் மாறிய பயணம்

  • IndiaGlitz, [Thursday,September 22 2016]
இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் தொடரி' படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப்பட்டதால் அதற்கான சுவாரஸ்யமும் இணைந்துகொண்டது. இவை எல்லாம் தந்திருக்கும் வாய்ப்பைப் படம் சரியாகப் பயன்ப்டுத்தியுள்ளதா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
புது தில்லியிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் ரயில்வே கேட்டரிங் தொழிலாளியாகப் பணியாற்றுபவன் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷா (பூஜா ஜாவேரி)வின் உதவியாளராக இருக்கும் சரோஜா (கீர்த்தி சுரேஷ்) மீது காதல் வயப்படுகிறான்.
இந்த ரயிலில் ஒரு மத்திய அமைச்சர் (ராதாரவி) பயணிக்கிறார். அவரது பாதுகாவலரான கமாண்டோ படை அதிகாரி (ஹரிஷ் உத்தமன்) பூச்சி முருகனையும் சரோஜாவையும் கொல்ல முயல்கிறார்.
ரயிலில் ஓட்டுனருக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்படும் மோதலால் விளையும் சிக்கல் பெரிதாகி, ரயில் கட்டுப்பாட்டை இழந்து கண்முன் தெரியாத வேகத்தில் பயணிக்கிறது. ஓட்டுனர் (ஆர்.வி.உதயகுமார்) மயங்கி விழுகிறார். அதை எப்படியாவது தடுத்து நிறுத்தவில்லை என்றால் பயணிகள அனைவரும் உயிரிழந்துவிடுவர்.
ரயில் தடுத்து நிறுத்தப்பட்டதா, அதில் பயணிக்கும் 745 பயணியருக்கும் என்ன ஆனது என்பதற்கான விடைகள் மீதிப் படத்தில் சொல்லப்படுகின்றன.
முழுவதும் ஒரு ரயிலில் நடக்கும் கதை என்ற சுவாரஸ்யமான களம், தனுஷ், ராதாரவி, கருணாகரன், கணேஷ் வெங்கட்ராமன், சின்னி ஜெயந்த், கீர்த்தி சுரேஷ் போன்ற பல திறமையான நடிகர்கள் அகியவை இருந்தும் முற்றிலும் ரசிக்கத்தக்க படத்தைக் கொடுக்கத் தவறிவிட்டார் இயக்குனர்.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு மட்டும் முதல் பாதி முழுவதையும் எடுத்துக்கொண்டிருப்பதால் அப்போதே பொறுமை எல்லை கடந்துவிடுகிறது. படத்தில் ரயில் சம்பந்தப்பட்ட பிரச்சனையே இடைவேளையின்போதுதான் தொடங்குகிறது. அதுவரை தம்பி ராமையா, கருணாகரன், தர்புகா சிவா, அஸ்வின் ஆகியோரின் காமடிக்கு மிக அதிக நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சிகள் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பொறுமையை சோதிப்பவையாக இருக்கின்றன.படத்தின் நீளமும் இதனால் அதிகரிக்கிறது. முதல் பாதி முடியும்போதே ஒரு முழுப் படம் பார்த்துவிட்ட அயற்சி ஏற்படுகிறது.
அதிக காமடிக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைத்ததால் படம் நீளமாக இருக்கிறதா அல்லது படம் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகக் காமடிக் காட்சிகளை சேர்த்தார்களா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அதிக நீளமும், காமடிக் காட்சிகள் பெருமளவில் எடுபடாமல் போவதும்தான் படத்துக்கு பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது.
இடண்டாம் பாதியில் ரயிலுக்கும் பயணிகளுக்கும் குறிப்பாக பூச்சி-சரோஜா காதல் இணைக்கும் என்ன ஆகுமோ என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்ளத் தொடங்கும்போதுதான் படத்துடன் ஓரளவு ஒன்றிப் பார்க்க முடிகிறது. அதிலிருந்து இறுதிவரை அந்த பதற்றத்தைத் தக்கவைத்திருப்பதால் இரண்டாம் பாதி தேறுகிறது.

ஆனால் இதிலும் லாஜிக் சறுக்கல்கள் அதிகம். தடாவிலிருந்து சென்னை வருவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்குமேல் ஆகாது. அதுவும் ரயில் 100 கிமீ வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் இத்தனை விஷயங்கள் நடப்பதாகக் காண்பிப்பதை ஏற்க முடியவில்லை. இதெல்லாம் போதாது என்று இந்த பரபரப்பான சூழலில் ரயிலிலேயே ஒரு டூயட் பாடலும் காமடிக் காட்சிகளும் வருகின்றன. நாயகனும் நாயகியும் இறந்துவிடுவார்களோ என்று பதட்டப்பட வேண்டிய இறுதிக் கட்டதிலும் காமடிக்காக சில வசனங்களை சேர்த்திருப்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டாம் பாதியிலும் ஒரு கட்டத்துக்கு மேல் படம் நீண்டுகொண்டே போகிறதே என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.
ஊடகங்களை பொறுப்பற்ற அயோக்கியர்களாக சித்தரிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அது இந்தப் படத்தில் உச்சக்கட்டத்தைத் தொட்டிருக்கிறது. ஆம் ஊடகங்கள் டிஆர்பிக்காக பல தவறுகளைச் செய்வதை மறுக்க முடியாது. அதை விமர்சிப்பதும் கிண்டலடிப்பதும் சரிதான். ஆனால் இந்தப் படத்தில் ஊடகங்களுக்கு மக்கள் உயிர்போவதைப் பற்றிக்கூட அக்கறை இல்லை என்பதுபோல் காண்பிப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக இறுதிக் கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நாயகனைத் துரத்திக்கொண்டு சென்று “தப்பிச்சிட்டா எங்களுக்குதான் முதல் பேட்டி கொடுக்கணும்' என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் சொல்வதெல்லாம் மிக மிக அதிகம்.
வில்லனைப் போன்ற வேடத்தில் வரும் ஹரீஷ் உத்தமனின் பாத்திரத்தை மலையாளியாகவும் தனுஷைத் தமிழராகவும் காட்டிவிட்டு இருவருக்கும் சில (மொழியுணர்வு சார்ந்த) வார்த்தை மோதல்களைக் காண்பிக்கும் காட்சிகள் படத்துக்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. இயக்குனர்கள் இதுபோன்ற விஷயங்களை இன்னும் கவனமாகவும் பொறுப்புடனும் கையாள வேண்டும்.
தனுஷ், நடிப்புக்கு பெரிய சவால் விடும் வேடம் இல்லை. அவர் பல படங்களில் நடித்திருக்கும் எளிய மனிதன் வேடம்தான். அந்த வேடத்தில் தனது வழக்கமான முத்திரையைப் பதித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் . பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் பாத்திரத்தில் நச்சென்று பொருந்துகிறார். எக்ஸ்பிரஷன்களிலும் அழகாக ஸ்கோர் செய்கிறார். ஆனால் ஹீரோயினை ஒன்றும் தெரியாத, எதை வேண்மானாலும் நம்பிவிடும் லூஸுப் பெண் பாத்திரமாகவே இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காண்பித்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.
மற்ற நடிகர்கள் அனைவருமே பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சரியாக வழங்கினாலும் சுவாரஸ்யம் சேர்ப்பது, ராதாரவி, ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ் ஆகியோர்தான். இவர்களது பாத்திரப் படைப்பும் நடிப்பும் படத்தின் ரசிக்கவைக்கும் காட்சிகளுக்கு பயன்பட்டிருக்கின்றன.
காவல்துறை அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், ரயில் ஓட்டுனராக வரும் ஆர்.வி.உதயகுமார், அமெச்சூர் கவிஞனாக வரும் கருணாகரான் ஆகியோர் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க நடிப்பைத் தந்திருக்கின்றனர். ஹரீஷ் உத்தமன் நெகடிவ் கேரகடரில் கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார். தம்பி ராமையாவின் காமடி சுத்தமாக எடுபடவில்லை. அவரைப் போன்ற நல்ல நடிகரை காமடியில் வீணடித்துக்கொண்டிருக்கிறோமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.
டி.இமானின் பாடல்களில் பழைய சாயல் ஒலித்தாலும் கேட்பதற்கு இதமாக இருக்கின்றன. ஆனால் படத்தில் அவை நீளத்தைக் கூட்டவே பயன்பட்டிருக்கின்றன. பின்னணி இசை பரவாயில்லை. ஆனால் முதல் பாதியில் அனைவரும் பேசிக்கொண்டே இருப்பதால் இசைக்கு வேலை குறைவுதான்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. குறிப்பாக இயற்கைக் காட்சிகள் அவற்றின் அழகோடு கடத்தப்பட்டிருக்கின்றன. எல்.வி.கே தாஸின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைக் குறைக்கப் பயன்பட்டிருக்கலாம். ரயில் உள்ளேவும் புறத்தோற்றத்தையும் அசலாகக் கொண்டுவந்திருக்கும் கலை இயக்குனரின் பணி பாராட்டத்தக்கது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சிகள் அவை கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று அப்பட்டமாகத் தெரியும் அளவு மோசமாக உள்ளன .
மொத்தத்தில் ரசிக்கத்தக்க சில விஷயங்களும் காட்சிகளும் இரண்டாம் பாதியில் பரபரப்பு அம்சமும் இருந்தாலும் அளவு கடந்த நீளம், பொறுமையை சோதிக்கும் காமடிக் காட்சிகள் ஆகியவற்றால் மறறக்கப்பட வேண்டிய ரயில் பயணமாகவே அமைகிறது இந்தத் 'தொடரி'.
மதிப்பெண்- 1.75/5

More News

'ரேணிகுண்டா' இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகி வருகிறது. அதேபோல்...

'சதுரங்க வேட்டை 2': அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் நம்பர் 1 நடிகை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நட்டி நட்ராஜ் நடிப்பில் மனோபாலா தயாரிப்பில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை'...

விஷ்ணுவிஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

விஷ்ணுவிஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை...

ஐஸ்வர்யாவின் அடுத்த படம் எப்போது? தனுஷ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை'...

ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் யார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்த ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பான செய்தி வெளிவந்தது...