125 விவசாய குடும்பங்களை வாழ வைத்த தனுஷ்: ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்
- IndiaGlitz, [Wednesday,August 02 2017]
தமிழக விவசாயிகள் குறிப்பாக தஞ்சை மாவட்ட விவசாயிகளின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். மழை பொய்த்தது மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் கைவிட்ட நிலையில் வங்கி கடனை கூட கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
விவசாயிகளுக்காக போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகள் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் விளம்பரம் தேடி கொள்கிறார்களே தவிர ஒரே ஒரு விவசாய குடும்பத்திற்கு கூட நிதியுதவி செய்ததாக செய்திகள் வெளிவரவில்லை
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயிகளின் அவலநிலை குறித்து கொலை விளையும் நிலம்' என்ற ஆவணப்படம் ஒன்றை பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி எடுத்திருந்தார். இந்த ஆவணப்படத்தை நடிகர் தனுஷிடம் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா போட்டு காட்டினார். இந்த படத்தை பார்த்த உடனே பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
தனுஷ் கூறியவாறே இயக்குனர் சுப்பிரமணியம் சிவா 125 குடும்பங்களை தேர்வு செய்தார். அவர்கள் அனைவருக்கு ரூ.50000 வழங்கிய தனுஷ், இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கும் உதவி செய்ய தயாராக இருப்பதாக உறுதி கூறியுள்ளார். தனுஷ் இந்த உதவியை செய்தது கூட பெரிய விஷயமில்லை. இந்த மிகப்பெரிய உதவியை அவர் விளம்பரப்படுத்தவில்லை என்பதிலேயே அவர் பெரிய மனது தெரிய வந்துள்ளது. ஒரு டியூப்லைட்டை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு அதில் தனது குடும்ப பெயர்கள் அத்தனை பேர் பெயர்களையும் எழுதி விளம்பரப்படுத்தும் இந்த உலகில் சத்தமில்லாமல் தனுஷ் செய்த இந்த உதவி மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.