மனைவி ஐஸ்வர்யாவை தனுஷ் எடுத்த ஸ்பெஷல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,February 14 2021]

கோலிவுட் திரையுலகில் உள்ள பலரும் இன்று காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களை எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷே எடுத்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறியபோது ’குடும்பத்திற்குள் அன்பு என்று வந்துவிட்டால் அந்த அன்பு நிபந்தனை அற்றதாக இருக்கும். அதை ஒருபோதும் யாரும் விடமாட்டார்கள். என்னுடன் இருக்கும் இந்த இரண்டு அன்பு உள்ளங்களை புகைப்படத்தை எடுத்தவர் எனது மெயின் அன்புக்குரியவர் என்று பதிவு செய்துள்ளார். காதலர் தினத்தில் தனுஷ் எடுத்த இந்த ஸ்பெஷல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார் என்பதும் அதனை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்க உள்ள அடுத்தடுத்த இரண்டு படங்களில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.