தனுஷின் 'குபேரா' ரிலீஸ் தேதி இதுவா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

தனுஷ் நடித்து வரும் குபேரா என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

தனுஷ் நடித்த ராயன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் குபேரா மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில், இட்லி கடை என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, அந்த படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் தொழில்நுட்ப பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி, சிவராத்திரி விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடித்துள்ளார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.