"நடிப்பின் இலக்கணம்" தனுஷ்-ற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை தன்னுடைய உழைப்பால் நடிப்பில் கொடி கட்டிப்பறக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஜூலை-28-ஆன இன்று தனுஷ் தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் திரைத்துறையில் சாதித்து, சிறந்த நாயகனாக உருவெடுத்தது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.
ஒல்லியான தேகம், பக்கத்து வீட்டு பையன் தோற்றம், ஒடுங்கி விழுந்த கண்ணம், கூச்ச சுபாவம் கொண்ட நடிப்பு, கலையில்லாத முகம் என்று ஆரம்ப காலகட்டத்தில் தனுஷின் தோற்றம் பலராலும், கிண்டலடிக்கப்பட்டது. ஏராளமான விமர்சனங்கள், கேலிகளை தாண்டி இன்று தமிழ் சினிமாவின் தலைசிறந்த கதாநாயகனாக வலம் வருகிறார் தனுஷ். நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனராகவும், சிறந்த பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் தமிழ் சினிமாவில், பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார் தனுஷ்.
துள்ளுவதோ இளமை:
கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு "துள்ளுவதோ இளமை" திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் தனுஷ். இந்த திரைப்படத்திற்கு இவரது அப்பா திரைக்கதை எழுத, இவரின் அண்ணன் செல்வராகவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன்பின்பு 2003-ல் காதல் கொண்டேன் படத்தில் இவரது நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ட்ரீம்ஸ் போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தர, தனுஷ் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வருவார் என அப்பொழுது யாரும் நம்பவில்லை.
இதையடுத்து “அது ஒரு கனாக்காலம்” என்ற திரைப்படத்தை கடந்த 2005-ல் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கியிருப்பார். இதனால் தனுஷ் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. தேவதையை கண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற கமர்சியல் திரைப்படங்கள், இவருக்கு வணிக ரீதியான வெற்றியை மட்டுமே தந்தது.
கடந்த 2006-இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான, "புதுக்கோட்டை" திரைப்படம் தான், தனுஷ் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்தின் திரைக்கதை, யுவன் இசை, நடிகர்களின் கதாபாத்திரங்கள், "தனுஷின் கொக்கி குமார்" கேரக்டர் பலராலும் ஈர்க்கப்பட்டது. இன்றளவிலும் தனுஷிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால், அது இந்த கேங்ஸ்டர் படம் மூலமாகத்தான். மீண்டும் இவர்களின் கூட்டணி மற்றும் தரமான படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெற்றிமாறன் எனும் தலைவன்....!
தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி என்றாலே, படம் மாபெரும் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு, இவர்களின் திரைப்படங்கள் இருந்துள்ளது. ஆரம்ப கால கட்டத்தில், தனுஷின் ஒல்லியான உடலமைப்பை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் 2007-- ல் "பொல்லாதவன்" படத்தில் மிரட்டலான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பார். தனுஷை ரொமாண்டிக் ஹீரோவாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் காண்பித்து, ரசிகர்கள் மனதில் நிலை நாட்ட வைத்தது இந்த திரைப்படம். இதில் வந்த ஜி.வி.பிரகாஷின் பைக் இசை bgm மற்றும் பாடல்களும், படத்திற்கு கூடுதல் சிறப்பு எனலாம்.
இதையடுத்து சேவல் சண்டையை மையக்கருத்தாக வைத்து வந்த திரைப்படம் தான் "ஆடுகளம்". இயல்பான தோற்றம் மற்றும் தத்ரூபமான நடிப்பு போன்றவற்றால், இப்படம் தனுஷிற்கு தேசிய விருதையும், உலகளாவிய புகழையும் பெற்றுத்தந்தது.
தனுஷிற்கு முக்கிய படமாகவும், அவரின் திரையுலக வாழ்க்கையையே புரட்டிப்போட்ட படம் என்றால், அது "வட சென்னை" தான். இதில் வடசென்னை பையனாகவே அவர் வாழ்ந்திருப்பார், பிற நடிகர்களின் கதாபாத்திரங்களும் படத்திற்கு கூடுதல் சிறப்பு என்று சொல்லலாம்.
4-ஆவது முறையை இவர்களின் கூட்டணி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அசுரன் படத்தில், குடும்பத்திற்காக தனுஷ் படும் கஷ்டங்களும், சாதி ரீதியான கொடுமைகளையும் சகித்து வாழும் கிராமத்து அப்பா தோற்றத்தில், தனுஷ் நடிப்பில் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லலாம். இவரின் தேர்ந்த நடிப்பிற்காக தேசிய விருது தனுஷிற்கு அறிவிக்கப்பட்டது.
உலகளாவிய சாதனை.....!
இசையமைப்பாளர் அனிருத்-ன் அறிமுகப்படம், மனைவி ஐஸ்வர்யா-வின் இயக்கத்தில் வெளியான "3" படத்தை, காதலர்களால், அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. பள்ளிக்காதலை எடுத்துரைக்கும் இப்படத்திற்கு காதலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அனிருத்-ன் இசையில் அனைத்து பாடல்களும் தாறுமாறு ஹிட்.
குறிப்பாக தனுஷ் எழுதியிருந்த "ஒய் திஸ் கொலவெறி" காதல் தோல்வி பாடல் உலகளவில் பிரபலமானது. யூடியூப் தளத்தில் இதுவரை 286 மில்லியன் பாரவையாளர்களை பெற்றுள்ளது, தென்னிந்தியாவில் 100 மில்லியன் பார்வையாளர்களை முதன் முதலாக பெற்ற பாடலும் இதுவே. இப்பாடல் மூலம் தனுஷ் உலகளாவிய ரசிகர்களை சம்பாதித்தார். கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாக சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரது வாயிலும் இப்பாடல் முணுமுணுக்கப்பட்டது. இப்பாடல் பிரபலமானது மூலம் இந்தியாவில் பிரபல பணக்காரர் டாட்டா தனுஷை விருந்துக்கு அழைப்பு விடுத்தார். ஜப்பான் பிரதமரும் தனுஷை பார்க்க அழைத்திருந்தார்.
இதன்பின்பு VIP, மாரி போன்ற திரைப்படங்கள் வணிக அளவில் வசூலை குவித்தாலும், சினிமாவில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தின. அனேகன் படம் ஓரளவு வெற்றியை தந்தாலும், ரசிகர்களால் பாராட்டுப்பெற்றது.
பாலிவுட் சினிமா....!
கடந்த 2013-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமா "ராஞ்சனா" என்ற படம் மூலம், தனுஷை சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. ஹிந்தி முன்னணி நடிகரான அமிதாப்பச்சனுடன் "ஷமிதாப்" படத்தில், தனுஷ் சரிசமமாக நடித்திருப்பார். இதனால் இந்தியளவில் சிறந்த நடிகராக அங்கீகாரம் பெற்றார். தற்போது ஹாலிவுட்டில் கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை 4 தேசிய விருதுகளையும், 3 விகடன் விருதுகளையும், விஜய் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை நடிப்பிற்காக பெற்றுள்ளார் தனுஷ்.
வெற்றிமாறன் - செல்வராகவன்....!
தனுஷ் இத்துணை வெற்றிகள் சினிமாவில் பெற்றதற்கு முதல் காரணம் அவரது தமையன் செல்வராகவன் தான். சகோதரர் என்ற உணர்வையும் தாண்டி, ஒரு மனிதனை சிறந்த நடிகனாக செதுக்கியதற்கு இவருக்கு முக்கிய பங்குண்டு. தன்னுடைய குரு, ஆசான் எல்லாமே அண்ணண் தான் என்று, பல நிகழ்வுகளில் கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2011-இல் செல்வா இயக்கத்தில், ‘மயக்கம் என்ன’ படத்தில் புகைப்படக்கலைஞனாக தோன்றியிருப்பார் தனுஷ். இவரை வெவ்வேறு கோணத்தில் சிறந்த நடிகனாக காட்டிய பெருமை செல்வாராகவனையே சாரும்.
தனுஷை மற்றொரு கோணத்தில் பட்டை தீட்டியவர் என்றால் வெற்றிமாறன் தான், தத்ரூபமாக நடிக்கவைத்து, தனுஷை தேசிய விருது வாங்க வைத்த பெருமை வெற்றியை சாரும்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக....!
தனக்குள் ஒளிந்திருந்த இயக்குனர் திறமையை "பவர்பாண்டி" படம் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் தனுஷ். ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற தேசிய விருது பெற்ற, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்ததும் இவரே.
இளந்தலைமுறை நடிகர்களில், மிகச்சிறந்த நடிகராகவும், தனக்கென்ற நடிப்பு பாணியை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனுஷிற்கு தனிச்சிறப்பு உண்டு. இயல்பான நடிப்பு, எதார்த்தமான தோற்றம் போன்றவை மூலம் நடிப்பின் இலக்கணமாக திகழ்கிறார் தனுஷ்.
ரவுடி பேபியின் சாதனை....!
மாரி-2 படத்தில் தனுஷ் வரிகளில், பிரபுதேவா நடனத்தில், யுவன் இசையில் வெளியான ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் எனலாம். இப்பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் ஆட்டமும், தீ, தனுஷின் துள்ளல் தரும் குரலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தென்னிந்தியாவில் முதன் முறையைக யுடியூப் தளத்தில் 1.2 பில்லியன் பார்வையாளர்களை பெற்ற பாடல் என்றால், அதுவும் தமிழ்ப்பாடலான ரவுடிபேபி தான். தற்போது வரை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
இறுதியாக மாறி செல்வராஜின் 'கர்ணன்' படத்தில் தனுஷ் நடித்திருந்தது, தமிழ் திரையுலகையே மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கவைத்தது.
முன்பே தனுஷ் ஒரு படத்தில் தனுஷ் அவர் அம்மாவிடம் பேசிய காட்சியில், "என்ன திட்டிட்டே இருங்க, ஒரு நாள் நான் ஜனாதிபதி கையில் அவார்ட் வாங்குவேன், அப்ப ஊரே என்ன திரும்பி பார்க்கும்" என கூறியிருந்தார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதியான 'பிரதீபா பாட்டில்' அவர்களிடம் தனுஷ் "தேசிய விருதை" பெற்று நடைமுறையிலும் செய்து காட்டியிருப்பார்.
தோற்றத்தையும், அழகையும், வண்ணத்தையும் தாண்டி ஒரு கலைஞனுக்கு நடிப்பு தான் தேவை. சினிமாவில் உள்ள பல ஹீரோயிசங்களை உடைத்தெறிந்தவர் தனுஷ். இன்று தமிழ் சினிமாவில் தலைசிறந்த நாயகனாக தன் உழைப்பு மூலம் உயர்ந்திருக்கும் "நடிப்பின் இலக்கணம்" தனுஷ் அவர்களுக்கு 38-ஆவது அகவை தின வாழ்த்துக்கள்....!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com