தனுஷ் மீதான அவதூறு வழக்கிற்கு தடை. சென்னை ஐகோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Wednesday,July 29 2015]
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளை பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெரும்புகழ் பெற்று தந்தது. ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் வழக்கறிஞர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அகில இந்திய வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தனுஷ், வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேர்கள் இணைந்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் 2 தேசிய விருதுகளும், பல்வேறு சர்வதேச விருதுகளும் பெற்ற காக்கா முட்டை' படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக சித்திரிக்கவில்லை என்றும் எனவே, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மேலும், அந்த வழக்கை ரத்து செய்வதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிபதி பி.என்.பிரகாஷ் தனுஷ் உள்பட 4 பேருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்து தீர்ப்பு அளித்தார்.