நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ், ஐஸ்வர்யா.. விவாகரத்து வழக்கின் தீர்ப்பு எப்போது?
- IndiaGlitz, [Thursday,November 21 2024]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இருவரும் ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிவதாக அறிவித்த நிலையில், குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். இரு குடும்பத்தினர், இருவரையும் சேர்த்து வைக்க எடுத்த முயற்சி எடுபடவில்லை. எனவே, இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் ஆஜராவில்லை. இதனால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிபதி முன் ஆஜராகினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை செய்ததாகவும், நவம்பர் 27ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.