தனுஷின் கொடி'யை மறுத்த 'லைகா' நிறுவனம்

  • IndiaGlitz, [Tuesday,April 05 2016]

தனுஷ் தயாரிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய படங்களை ரிலீஸ் செய்த லைகா நிறுவனம், அவர் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த 'கொடி' படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வந்தது. ஆனால் அந்த செய்தியை தற்போது லைகா நிறுவனம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


லைகா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறியபோது 'தனுஷின் கொடி' படத்தின் ரிலீஸ் உரிமையை பெறுவது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் இப்போதைக்கு எங்களது தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', விஜய் ஆண்டனியின் 'எமன்', கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன் படம், ரஜினியின் 2.0' ஆகிய படங்களை மட்டுமே இருப்பதாகவும், வேறு எந்த படங்களையும் தயாரிக்கவோ அல்லது ரிலீஸ் உரிமையை பெறவோ இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் தனுஷின் கொடி படத்தின் வியாபாரம் இனிமேல்தான் நடைபெறும் என தெரிகிறது. அண்ணன், தம்பி என இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.