வெங்காயம் இறக்குமதி பண்ணியாச்சு..ஆனால் பருப்பு விலை உயர்ந்திருச்சே..!
- IndiaGlitz, [Wednesday,December 11 2019]
வெங்காயத்தைத் தொடர்ந்து பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத வகையில் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன.
சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் வரை 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல் ரக உளுத்தம் பருப்பு, தற்போது 135 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 75 ரூபாய்க்கு விற்பனையான இரண்டாம் ரக உளுத்தம் பருப்பு 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 95 ரூபாய்க்கு விற்பனையான முதல் ரக துவரம் பருப்பு 110-க்கும், 75 ரூபாய்க்கு விற்பனையான இரண்டாம் ரக துவரம் பருப்பு 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 80 ரூபாய்க்கு விற்பனையான பாசிப்பருப்பு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது
வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களின் விலை கடுமையாக உயர்வை சந்தித்திருக்கும் நிலையில் தற்போது பருப்பு போன்ற அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வால், அன்றாடம் வீட்டில் சமைக்கும் உணவு பட்டியலை மாற்றிவிட்டதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே விலை உயர்வால் வெங்காய தோசை செய்வதை நிறுத்திவிட்டதாகவும், தற்போது உளுத்தம் பருப்பின் விலை உயர்வால் இட்லி தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு, பருப்புகளின் விலையும் உயர்ந்துள்ளதால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.