வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினோம்: டிஜிபி விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,May 23 2018]
தூத்துகுடியில் நேற்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் இதுவரை 11 அப்பாவிகள் பலியாகியுள்ளனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை போல் நடந்த இந்த படுகொலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன்? என்று தமிழக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி ராஜேந்திரன் விளக்கமளித்தபோது, 'போராட்டக்காரர்களால் பொதுமக்கள் உயிருக்கும் பொது சொத்துக்களுக்கும் ஆபத்து விளைவிப்பதை தடுக்கும் பொருட்டே தகுந்த எச்சரிக்கைக்கு பின் கண்னீர்ப்புகை குண்டு, தடியடி ஆகியவற்றுக்கு பின் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பின்னரே துப்பாக்கி பிரயோகம் செய்து போராட்டக்காரர்களை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
இந்த சம்பவத்தில் சிலர் உயிர் பலியானது மட்டுமின்றி போராட்டக்காரர்களின் தாக்குதலினால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அரசு ம்ற்றும் காவல்துறை வாகனங்கள் தீவைத்து சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த சம்பவம் குறித்த முழு தகவல்களை கேட்டறிந்த பின்னர் பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஜிபி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.