முதல்வர் உடல்நலம்: டிஜிபி ராஜேந்திரன் அவர்களின் அவசர உத்தரவு

  • IndiaGlitz, [Monday,December 05 2016]

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை முதல் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் முன்னர் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்து வருகின்றனர். முதல்வர் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய அவர்கள் மழை, மற்றும் குளிரில் நடுங்கியவாறு மருத்துவமனை வாயிலின் முன் காத்திருக்கின்றனர்.
இதனால் டிஜிபி ராஜேந்திரன் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்படி இன்று காலை 7 மணிக்கு அனைத்து காவலர்களும் சீருடையில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏடிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த உத்தரவை அடுத்து இன்று காலை 7 மணிக்கு காவல்துறை ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள், சிபிசிஐடி காவலர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசார் உள்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பணிக்கு இன்று காலை 7 மணிக்கு பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.