Download App

Devi 2 Review

தேவி 2: திரைவிமர்சனம்: ஒரு குழப்பமான பேய்ப்படம்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தேவி' படத்தின் அடுத்த பாகம் தான் இந்த 'தேவி 2'. முதல் பாகத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னாவின் 'சல்மார்' பாடலின் அபாரமான டான்ஸ், தமன்னாவின் இரண்டு வித்தியாசமான வேடம், ஏ.எல்.விஜய்யின் திரைக்கதை, பிரபுதேவாவின் அப்பாவித்தனமான நடிப்பு மற்றும் ஆர்ஜே பாலாஜியின் காமெடி ஆகியவை ஒருங்கே இருந்ததால் ஓரளவுக்கு படம் தேறியது. ஆனால் 'தேவி 2' படத்தில் குழப்பமான திரைக்கதையால் படத்தை முழு அளவில் ரசிக்க முடியவில்லை. படத்தில் இருக்கும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களை கோவை சரளாவின் வழக்கமான காமெடி ஓரளவுக்கு மறைக்கின்றது. 

முதல் பாகம் பார்த்தவர்களுக்கு ரூபி என்ற பேய், பிரபுதேவாவின் மனைவி தேவி மீது புகுந்து அவரை பாடாய் படுத்தும் காட்சிகள் இருப்பதை தெரிந்திருக்கலாம். அதே கதை தான் கிட்டத்தட்ட இதிலும் தொடர்கிறது. முதல் பாகம் போலவே பிரபுதேவா, தமன்னா இருவரும் வீட்டிற்குள் இருக்கும் வரை பேய் அவர்களை ஒன்றும் செய்யாது. அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உண்டு. பேய்க்கு பயந்து கொண்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் உணவு உள்பட எல்லா பொருட்களையும் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைத்து வெளியே செல்லாமல் உள்ளனர். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் என்ன நடக்கின்றது என்பதும், முதல் பாகத்தில் இருந்தது போல் இல்லாமல் இந்த படத்தில் இரண்டு பேய்கள் இருப்பதும் அதனால் ஏற்படும் குழப்பங்கள், காமெடிகள் தான் இந்த படத்தின் மீதிக்கதை

இரண்டு பேய் இரண்டு பேர்களை பிடிப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமான கற்பனை என்றாலும் பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பேயிடம் இருந்து தப்பிக்க ஜோதிடரின் அறிவுரையின்படி தமன்னாவுடன் மொரீஷியஸ் தீவு செல்கிறார் பிரபுதேவா. ஆனால் அதுவும் கதைக்கு பெரிதாக உதவவில்லை. இரண்டாவது பேய் வந்தவுடன் பிரபுதேவாவின் நடிப்பிலும் கதையிலும் கொஞ்சம் மாற்றமும் சுவாரஸ்யமும் தெரிகிறது. அவருடைய அப்பாவித்தனமான நடிப்பு இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இந்த நடிப்பை இயக்குனர் ஏ.எல்.விஜய் சரியாக பயன்படுத்தியுள்ளார். அதேபோல் தமன்னாவின் நண்பர் கதையில் எண்ட்ரி ஆனவுடன் கதை சூடு பிடிப்பதோடு, கோவை சரளாவின் சரவெடி காமெடியும் சேர்ந்து ஓரளவு பார்வையாளர்களை ரசிக்க வைக்கின்றது. 'காஞ்சனா 3', 'தேவி 2' என் வரிசையாக பேய்ப்படங்களை தேற்றி வருவதே இவரது காமெடி கேரக்டர்கள்தான் என்றால் மிகையாகாது.

மொத்தத்தில் இந்த படம் ஆங்காங்கே சில காமெடி காட்சிகளை வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். பிரபுதேவா, தமன்னா இருவருமே அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்கள் என்பதால் இவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைகிறது. அதேபோல் 'தேவி' படத்தில் அமைந்த அருமையான ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் சாம் சிஎஸ் இசையில் இந்த படத்தில் மிஸ்ஸிங். பயமுறுத்தும் வகையில் ஒரு பேய்ப்படத்தில் காட்சி இல்லாதது ஒரு பின்னடைவே. முதல் பாகத்தில் கிட்டத்தட்ட முழு படத்தில் வந்த ஆர்ஜே பாலாஜியை இந்த படத்தில் குறைந்த அளவே பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் வரும் காட்சிகளில் காமெடிக்கு பஞ்சமில்லை. அதேபோல் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோனு சூட் இந்த படத்தில் கடைசி சில நிமிடங்களுக்கு மட்டும் வருகிறார். இந்த படத்தின் இன்னொரு கதாநாயகியான நந்திதாவின் கேரக்டரும் குழப்பத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதால் அவரது நடிப்பை ரசிக்க முடியவில்லை. 

ஒளிப்பதிவாளர் போஸின் இயல்பான படப்பிடிப்பு, ஆண்டனியின் தெளிவான தொகுப்பு, அளவான கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை படத்தை இயல்பாக கொண்டு செல்ல உதவியுள்ளது. மொத்தத்தில் 'தேவி 2' திரைப்படம் ஒரு முழு அளவிலான திருப்தியான காமெடி த்ரில்லர் என்று கூற முடியாவிட்டாலும் கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சென்று லாஜிக் மறந்து சிரித்துவிட்டு வரும் வகையிலான ஒரு மசாலா படம் என்ற அளவில் ஒருமுறை பார்க்கலாம்
 

Rating : 2.3 / 5.0