நீரஜ் சோப்ரா கொண்டாடப்பட்ட அளவுக்கு இவர் ஏன் கொண்டாடப்படவில்லை?

  • IndiaGlitz, [Wednesday,August 11 2021]

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ராவை இந்தியாவே கொண்டாடி வருகிறது என்பதும் அவருக்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீரஜ் சோப்ராவை கொண்டாடிய அளவுக்கு இதே ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் ஒருவர் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்து தங்கம் வென்றவர் தேவேந்திர ஜஜாரியா. இவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு 63.97 மீட்டர் ஈட்டி எறிந்து புதிய சாதனை செய்தார். இதற்கு முன் பாரா ஒலிம்பிக் போட்டியில் 62.15 மீட்டர் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ஒரே இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை இந்தியா மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் கொண்டாடி வரும் நிலையில் அந்த அளவுக்கு தேவேந்திர ஜஜாரியா கொண்டாடப்பட்டாரா? என்பது சந்தேகமே. இனிமேலாவது பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களும் கொண்டாடப்பட வேண்டும் என்பதும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.