Download App

Devarattam Review

தேவராட்டம்:  கவுதம் கார்த்திக்கின் ஆக்சன் ஆட்டம்

இயக்குனர் முத்தையா படம் என்றாலே ஒரு ஃபார்முலா இருக்கும். கிராமம், குடும்பம், பாசம், ஒரு வில்லன், அடிதடி, கடைசியில் சுபம். இதே ஃபார்முலாவில் தான் இந்த 'தேவராட்டம்' படமும் உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

ஐந்து அக்கா, ஐந்து மாமா அவர்கள் குழந்தைகளுடன் கடைக்குட்டி செல்லமாய் வளர்கிறார் கவுதம் கார்த்திக். அப்பா, அம்மா இல்லாத குறையை அக்காக்களும் மாமாக்களும் பார்த்து கொள்ள, செல்லமாய் மட்டுமின்றி கொஞ்சம் வீரமாகவும் வளர்கிறார். தப்பு எங்கே நடந்தாலும் தட்டி கேட்கும் தைரியத்துடன் மதுரைக்குள் கவுதம் கார்த்திக் வலம் கொண்டிருக்கும் நிலையில் மதுரையையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ரெளடி கும்பல் ஒன்றுக்கும் கவுதம் குடும்பத்திற்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை இடைவேளையின்போது பெரிதாகி, இருதரப்பிலும் ஏற்படும் இழப்புகள், பழிவாங்கல்கள், வெட்டு, குத்து, வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள், போலீஸ் என நீண்டு கடைசியில் ஒரு திடுக்கிடும் முடிவுடன் முடிவதுதான் இந்த படத்தின் கதை.

கவுதம் கார்த்திக் இந்த படத்தில் முழு ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ளார். அறிமுக காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை ஆக்சனில் பட்டையை கிளப்புகிறார். திலிப் சுப்பராயனின் ஒவ்வொரு ஸ்டண்டும் அதிர்கிறது. ஜெயில் சண்டை, கிளைமாக்ஸ் சண்டையில் கவுதம் கார்த்திக் உயிரை கொடுத்து நடித்துள்ளார். ஆக்சனை அடுத்து கொஞ்சம் பாசம், ரொமான்ஸ், காமெடி என பல்சுவை நடிப்பையும் கவுதம் கார்த்திக் முயற்சித்துள்ளார். கவுதமுக்கு நிச்சயம் இந்த படம் ஒரு மைல்கல்தான்.

முத்தையா படங்களில் பொதுவாக நாயகிக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் மஞ்சிமா மோகனை அந்த அளவுக்கு அவர் பயன்படுத்தவில்லை. கவுதமின் மூத்த அக்காவாக வரும் வினோதினியும், அவரது கணவராக நடித்திருக்கும் போஸ் வெங்கட்டின் நடிப்பு அருமை.

நீண்ட இடைவெளிக்கு பின் சூரியின் காமெடி இந்த படத்தில் தான் ஓரளவுக்கு பார்க்கும்படி இருக்கின்றது. தனது வழக்கமான டயலாக் மாடுலேஷனை மாற்றியுள்ளதால் ரசிக்கும்படியும் உள்ளது. இந்த படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள். அதில் விஜயன் நடிப்பு மட்டும் ஓகே. 

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் 'மதுரை பளபளக்குது' பாட்டு ஓகே. பின்னணி இசையும் ஒரு கிராமத்து ஆக்சன் படத்திற்கு ஏற்றாற்போல் உள்ளது. சக்தி சரவணனின் கேமிரா ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளது. பிரவீண் கே.எல் படத்தொகுப்பு முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. திலிப் சுப்பராயன் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்பது போல் தனது உழைப்பை கொட்டியிருக்கின்றார். 

இந்த படம் ஜாதி படம் இல்லை என்று கிட்டத்தட்ட சத்தியம் செய்து பல பேட்டிகளில் கூறியுள்ளார் இயக்குனர் முத்தையா. ஆனால் கவுதம் கார்த்திக் வரும் பல காட்சிகளின் பின்னால் இருக்கும் போஸ்டர்களும், அடிக்கடி மதுரையின் முக்கிய இடத்தில் உள்ள சிலையை காண்பிக்க அவர் தவறவில்லை. இந்த காட்சிகளில் தியேட்டர்களில் விசில் சத்தம் விண்ணை பிளப்பதில் இருந்தே இந்த படம் ஜாதிப்படமா? இல்லையா? என்பதை ரசிகர்கள் முடிவு செய்து கொள்ளலாம். இருப்பினும் ஜாதியை பற்றிய ஒரு வசனம் கூட படத்தில் இல்லை என்பதால் இயக்குனர் கூறியதை நம்பித்தான் ஆகவேண்டும்.

முதல் பாதியை குடும்ப கலாட்டாக்கள், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ரொமான்ஸ், காமெடி, சில ஆக்சன்கள் என கமர்ஷியலாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை கொண்டு சென்ற இயக்குனர், இரண்டாம் பாதியில் கொஞ்சம் சறுக்கியுள்ளார். மீண்டும் கிளைமாக்ஸில் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதால் படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு திருப்தி ஏற்படுகிறது  .

'கத்திக்குத்து எங்களுக்கு காதுகுத்து மாதிரி', 'மண்ணை தொட்டவனை கூட விட்றலாம், பொண்ணை தொட்டவனை விடக்கூடாது போன்ற மண்வாசனை வீரவசனங்கள் படத்தில் ஆங்காங்கே உண்டு. வழக்கம் போல் வில்லனின் முட்டாள்தனமான பழிவாங்கும் முயற்சி, பட்டப்பகலில் பொது இடத்தில் கொலை நடந்தாலும் கண்டுகொள்ளாத போலீஸ் போன்ற லாஜிக் மீறல் காட்சிகளும் உண்டு. பெண்கள் என்பவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களை சீரழிக்க முயற்சி செய்பவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் அல்ல, கருவறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற மெசேஜுடன் படம் முடிகிறது. மொத்தத்தில் கோடை விடுமுறைக்கேற்ற வகையில் ஒரு விறுவிறுப்பான ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட் கலந்த  படம் என்பதால் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். 

Rating : 2.5 / 5.0