தேவ் - காதலர் தினத்திற்கான படம்
'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற் ஆக்சன் படம் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற ஃபேமிலி படம் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கருடன் கைகோர்த்து மீண்டும் 'பையா' டைப்பில் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
தந்தை பிரகாஷ்ராஜ் வளர்ப்பில் சுதந்திரமாக, வாழ்க்கையை ரசித்து உலகம் சுற்றி வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் தேவ்(கார்த்திக்). நண்பர்கள், போட்டோகிராபி தொழில் என ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் தேவ், நண்பர்களின் வற்புறுத்தலால் ஃபேஸ்புக்கில் காதலியை தேட, அவர் கண்ணில் சிக்குகிறார் மேக்னா (ரகுல் ப்ரித்திசிங்). தந்தையால் கைவிடப்பட்டு தாயின் வளர்ப்பில் வாழ்ந்த மேக்னா, எந்த ஆணையும் நம்பாமல் இருக்கும் நிலையில் அவரது நம்பிக்கையை தேவ் பெற்றாரா? இருவருக்கும் காதல் ஏற்பட்டதா? முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
ஒரு முழுநீள ரொமான்ஸ் நாயகன் கேரக்டருக்கு கார்த்திக் மிகப்பொருத்தமாக உள்ளார். நண்பர்களுடன் அடிக்கும் கொட்டம், ரகுலை இம்பரஸ் செய்ய எடுக்கும் முயற்சிகள், காதலை மிக டீசண்டாக தெரிவிக்கும் அழகு, காதலில் பிரச்சனை வரும்போது அதை சந்திக்கும் பொறுமை என ஒட்டுமொத்த படத்தை தூக்கி நிறுத்துகிறார் கார்த்தி.
அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர், சுயமாக உழைத்து தொழிலதிபர் ஆனவர், தந்தையின் கசப்பான அனுபவத்தால் ஆண்களை வெறுப்பவர் என்று அறிமுகமாகும் ரகுல், கொஞ்சம் கொஞ்சமாக தேவ் இடம் காதலில் விழுவது, இருந்தும் முழுதாக நம்பாமல் அவ்வப்போது சந்தேகப்படுவது, தனக்காக மட்டுமே தேவ் இருக்க வேண்டும் என்று சுயநலமாக சிந்திப்பது, அதனால் காதலில் ஏற்படும் பிரச்சனைகள் என ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் ரகுலுக்கு. கேரக்டரை உணர்ந்து ரகுல் நடித்துள்ளதால் அவரது கேரக்டர் மனதில் நிற்கிறது.
ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் என இரண்டு சீனியர் நடிகர்களுக்கு மிகக்குறைவாக வரும் காட்சிகள். இருப்பினும் குறைந்த காட்சிகளில் நிறைவான நடிப்பு.
கார்த்தியின் நண்பராக கிட்டத்தட்ட முதல் பாதி முழுவதும் ஹீரோவுடன் டிராவல் செய்கிறார் விக்னேஷ். காமெடி சுமாராக இருந்தாலும் நடிப்பு ஓகே. அதேபோல் இன்னொரு நண்பராக வரும் அம்ருதா ஸ்ரீனிவாசன் நடிப்பும் ஓகே.
படத்தின் பிளஸ்களில் ஒன்று பாடல்கள் மற்றும் பின்னணி இசை. ஒரு ரொமான்ஸ் படத்திற்கான சரியான பின்னணி இசையும், 'அனாங்கே' மற்றும் எங்கடி நீ போன' பாடல்க்ளும் அருமை.
வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் முழுவதும் ரம்மியமான காட்சிகள். குறிப்பாக மும்பையில் இருந்து சென்னைக்கு டிராவல் செய்யும் காட்சிகளும், இமயமலை காட்சிகளும் சூப்பர். ரூபனின் படத்தொகுப்பு ஓகே என்றாலும் இரண்டாம் பாதியில் படம் ஸ்லோவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம்.
அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் முதல் பாதி முழுவதையும் கேரக்டர்கள் அறிமுகம், கார்த்தி, விக்னேஷ் காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ் என கதையை நகர்த்திவிடுகிறார். இரண்டாம் பாதியில் ஒருசில அருமையான காட்சிகளுடன் காதல் வெற்றி பெறுகிறது. அத்துடன் படத்தை முடித்திருந்தால் திருப்தியுடன் ரசிகர்கள் வெளியே வந்திருப்பார்கள். ஆனால் அதன்பின் காதலர்களிடையே செயற்கையாக ஒரு பிரச்சனையை உருவாக்கி, அந்த பிரச்சனையை முடிக்க திரைக்கதையில் படாதபடுபடுகிறார். காதல் மோதலுக்கும் மோதலின் தீர்வுகளுக்கும் அழுத்தமான காட்சிகள் இல்லை. கிளைமாக்ஸ் இமயமலை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர் என்றாலும் இந்த படத்தின் கதைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. மேலும் பையா, காற்று வெளியிடை, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களின் ஞாபகம் அவ்வபோது வருவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் கார்த்தி, ரகுலின் நடிப்பு பிளஸ் ஆகவும், அழுத்தமில்லாத திரைக்கதை, மெதுவாக நகரும் இரண்டாம் பாதி மைனஸ் ஆகவும் உள்ளது.
காதலர் தினத்தில் கார்த்தியின் ரொமான்ஸ் நடிப்பை ரசிக்க விரும்புபவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்.
Comments