சிறந்த பலனைத் தரும் பங்குனி உத்திர விரதம் கடைப்பிடிப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
வருடத்தில் 12 ஆவது மாதமான பங்குனி மாதத்தில் 12 ஆவது நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று 12 கைகளை கொண்ட முருகனுக்கு விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தத் தினத்தில் திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் ஐதீகமாக இருந்து வருகிறது.
2022 இல் வரும் பங்குனி உத்திர வழிபாடு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனால் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
பங்குனி உத்திரத் தினத்தை “கலியாண விரதம்“ என்றும் பெரியவர்கள் கூறுகின்றனர். காரணம் இந்தச் சிறப்பான தினத்தில்தான் பல தெய்வங்களுக்கு திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் திருமணம் ஆகாத பெண்கள் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து மாலையில் வழிபாடு ஆராதனை செய்யும்போது அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதும் திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்யம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அரசாங்க வேலை வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்திருப்போர், குடும்ப நன்மைக்காக விரும்புவோர் எனப் பலரும் பங்குனி உத்திரத் தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதையே ஒரு சிறந்த பாக்கியமாகக் கருதுகின்றனர்.
விரத வழிபாடு முறை
பங்குனி உத்திரத் தினத்தன்று காலையில் எழுந்தவுடன் அன்றாட செயல்பாடுகளை முடித்துக்கொண்டு முருகனுக்கு ஆராதனை காட்டி பூஜை பாராயணங்களைச் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாடுகளை நடத்தலாம். விரும்பினால் அருகில் உள்ள முருகன் கோவிலிலும் இதைச் செய்து வழிபடலாம்.
மேலும் நாள் முழுக்க முழுமையாக உபநியாசம் இருப்பதையே விரத நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. அதனால் இன்று நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து மாலையில் முருகனுக்கு வழிபாடு நடத்துவது சிறந்தது.
பங்குனி உத்திர விரதத்தை 8-80 வயது முதியவர்கள் வரை பெண்கள், சிறியவர்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவேளை முதியவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பட்சத்தில் அவர்கள் ஒருவேளை உணவு எடுத்துக் கொள்வதைக் கூட வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் சிறியவர்கள், பெண்கள், உடல்நலம் குன்றியவர்கள் என இவர்கள் விரதம் இருக்கும்போது தேவைப்பட்டால் நீர் மோர், இளநீர், பழச்சாறு, துளசி தீர்த்தம், தேன் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் காலை முதலே கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை மற்றும் திருப்புகழ் இவற்றில் ஏதாவது ஒன்றை படிப்பது அல்லது கேட்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வசதியில்லாதவர்கள் நாள் முழுவதும் “ஓம் சரவண பவ“ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லும்போது மனதிற்கு இன்பமான அமைதி கிடைத்து, சிறந்த செல்வத்தையும் ஞானத்தையும் அடைய முடிகிறது.
சிறப்பான பங்குனி உத்திரத் தினத்தன்று அன்னதானம் கொடுப்பது, ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் தம்பதிகளை வீட்டிற்கு அழைத்துவந்து அவர்களுக்கு உணவளித்து தாம்பூலத்தில் ஆடை, பழங்களை வைத்துக் கொடுக்கலாம். இதனால் சிறந்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
முடிந்தவர்கள் பங்குனி உத்திரத்தினத்தில் தண்ணீர் பந்தல் அமைத்தல், நீர்மோர் பந்தல் வைப்பதையும் கடைப்பிடிக்கலாம். மேலும் முருகனுக்கு விரதம் இருக்கும் சிறந்த நாளில் பெரும்பாலும் மவுனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பங்குனி உத்திர விரதத்தை நாள் முழுவதும் கடைப்பிடிப்பவர்கள் மாலையில் முருகன் கோவில் அல்லது சிவன் கோவில் இருக்கும் முருக சன்னதிக்குச் சென்று சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டு தங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே தீப தூபத்தை ஏற்றி வைத்து பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இப்படி 48 வருடங்கள் தொடர்ந்து பங்குனி உத்திரத் தினத்தில் முருகனுக்கு விரதம் இருக்கும்போது அவர்கள் பிறவி பயனை அடைந்து தெய்வீகப் பயனை அடைவார்கள், அதாவது அடுத்தப் பிறவி எடுக்காமல் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments