27 வருடங்களுக்கு முன் 'பாட்ஷா' படம் பார்த்த அனுபவம்: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் நெகிழ்ச்சியான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தனது பள்ளி காலத்தில் ‘பாட்ஷா’ படம் பார்த்த மலரும் நினைவுகளை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நெகிழ்ச்சியுடன் அவர் செய்த பதிவு இதோ:
1995, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் பாஷா, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது தினத்தந்தியில் இச்செய்தியை படித்தேன்.
வெள்ளிமலரில் தலைவர் ஆட்டோகாரர் உடையில் நடந்து வந்துகொண்டிருக்கும் கலர் ஃபோட்டோ போட்டிருந்தார்கள்.அந்த போட்டோவை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று தெரியாது. அதை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கதை ஓடியது. அந்த கதையில் நானாக கற்பனை செய்துகொண்டு ஒரு பாட்டு எழுதினேன்..நான்கு வரிகள்தான்.
பாஷா வர்றாண்டா
பாஷா வர்றாண்டா
தப்பு பன்னா கண்டிப்பாண்டா
மீறி பன்னா தண்டிப்பாண்டா”
எனக்கு தெரிந்து நான் எழுதிய முதல் படைப்பு.
வகுப்பில் அருகில் இருக்கும் நண்பனிடம் காட்டினேன் எதுவும் சொல்லாமல் சிரித்தான். பாஷா பற்றிய செய்திகளை படிக்க படிக்க ஆர்வம் அதிகமானது. ஒரு நாள் ஸ்கூல் விட்டு வரும்பொழுது எங்கேயோ ஸ்பீக்கரில் ஒரு பாடல் ஓலித்தது.
“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்”
கேட்டவுடன் கண்டுபிடித்துவிட்டேன். இது பாஷா பாடல் என்று. ஓரிரு நாளில் திரும்பிய பக்கமெல்லாம் அதே பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அனைவரும் அதையே பாடிக்கொண்டிருந்தார்கள். பள்ளி ஆண்டு விழா என்றால் ஹிந்தி பாடல்களுக்கு மட்டுமே டான்ஸ் ஆடும் பழக்கம் எங்கள் ஸ்கூலில் உண்டு. ஆனால் அந்த ஆண்டு ஆட்டோக்காரன் பாட்டும் தேர்வு செய்யப்பட்டது.
இதை விட என்ன சான்ஸ் வேண்டும்? அதுவரை எந்த மேடையிலும் ஆடி பழக்கமிலாத நான் ஓடிச்சென்று கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட ஒண்றரை மாதம் தினமும் அந்த பாடலுக்கு நடன பயிற்சி. இடையில் ஒரு நாள் ஊரே பரபரப்பானது. ஆம் பாஷா ரிலீஸ்.
எல்லாரும் படம் பார்த்துவிட்டு பாஷா பாஷா என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் கூட்டிப்போகச்சொல்லி நச்சரித்தேன். ஒரு நாள் மாலை அழைத்துச்செல்வதாக கூறினார்கள்.அன்று முழுக்க வகுப்பில், “பாஷா பாக்கப்போறன் பாஷா பாக்கப்போறன்” என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். வீட்டில் இருந்து கிளம்பி தியேட்டர் செல்லும் வரை ரோட்டில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்த்து படத்தை பற்றி கற்பனை செய்துகொண்டே சென்றேன். நல்ல கூட்டம் டிக்கெட் வாங்க உள்ளே சென்று சீட்டில் உட்கார்ந்த பின்புதான் அப்பாடா படம் பார்த்துவிடுவோம் என்று நம்பினேன். எக்ஸ்ட்ரா சேரெல்லாம் போட்டு படம் பார்த்தார்கள். சிலர் கதவருகே நின்று கொண்டே பார்த்தார்கள். படம் துவங்கியது. தியேட்டர் குலுங்கியது.
சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டில் இருந்து படம் முடியும் வரை அதிர்ந்தது. அறிமுக காட்சி, மெடிக்கல் காலெஜ் காட்சி, போலீஸ் உயர் அதிகாரியை சந்திக்கும் காட்சி, இடைவேளை சண்டை காட்சி, பாஷா அறிமுக காட்சி, க்ளைமாக்ஸ் சண்டை காட்சி என்று அனைத்தும் மாஸ் மாஸ் மாஸ். இப்படி ஒரு ஹீரோ இப்படி ஓரு ஹீரோயிசம். இப்படி ஒரு எனர்ஜி நான் பார்த்ததில்லை.
படம் முடிந்து வீடு திரும்பியும் என்னுள் அந்த தாக்கம் நீங்கவில்லை. பாஷா என்னுடனே வந்துவிட்டார். அடுத்த நாள் வகுப்பில் நான் கதை சொல்லி என் நரேஷனில் பாஷா பார்த்தார்கள் பல நண்பர்கள். பாஷா என்னைவிட்டு போகவேயில்லை.
அதே எனர்ஜியோடு ஸ்கூல் விழாவில் ஆடினேன். நானே பாஷாவாக மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த நிகழ்ச்சி. ஆடி முடித்து கீழே இறங்கியதும் யார் யாரோ வந்து கை கொடுத்தார்கள். நிறைய பேர் வந்து கன்னத்தை கிள்ளினார்கள். ஒரு ஆட்டோக்காரர் என்னை தூக்கிக்கொண்டு நடந்தார். அன்றிலிருந்து பாஷாவாக அறியப்ப்ட்டேன். பாஷா... அன்பழகன் என்னை அப்படித்தான் அழைப்பார். வாட்ச்மேன் கலியபெருமாள் “ஆட்டோக்காரரே” என்று அழைப்பார்.
அதுதான் என் சினிமாக்கனவுக்கான ஆரம்பம் என்று அப்பொழுது எனக்கு தெரியாது. அதற்கு பிறகு பல மேடை நிகழ்ச்௪கள், பல படைப்புகள்.இருபது வருடங்கள் கடந்துவிட்டது. இதோ இன்று நானும் ஒரு இயக்குனர்!
என்னை இந்த சினிமா உலகிற்கு கையை பிடித்து அழைத்து வந்த பாஷா திரும வருகிறார்.
இன்று மீண்டும் அதே பாஷா ரிலீஸ் ஆகிறது. கிளம்பி விட்டோம் பாஷா பார்க்க.
நான் இன்னும் ஆர்வத்தோடு, அதே ஐந்தாம் வகுப்பின் மனதோடு...
இந்த பாஷா இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களை அப்படியே வைத்திருப்பார்.
நாங்களும் அவரை கொண்டாடிக்கொண்டே இருப்போம்.
ஏனென்றால், “ஒரே ஒரு பாஷாதான் ஊருக்கெல்லாம்”
Wrote this few years back when BAASHAA got re released...#27yearsOfBaasha#Superstar#Rajinikanth #Baasha #Thalaivar
— Desingh Periyasamy (@desingh_dp) January 12, 2022
Antha Sunglass guy naanthaan pic.twitter.com/nTQ4fzjr4f
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments