விஜயகாந்தை சந்தித்த ஓபிஎஸ்: கூட்டணி இறுதியாகின்றதா?

கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக என மாறி மாறி இரண்டு கூட்டணியிலும் தேமுதிக பேரம் பேசி வந்தது. இரண்டு மாறுபட்ட கொள்கையுடைய கூட்டணியில் ஒரே நேரத்தில் மறைமுகமாகவும் நேரடியாக பேசி வந்ததால் அக்கட்சியின் அணுகுமுறையை அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். மோடி, ராகுல்காந்தி என யார் பிரதமர் என்றாலும் ஓகே, எங்களுக்கு அதிக தொகுதி வேண்டும் என்ற கொள்கை மட்டுமே அக்கட்சியிடம் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இன்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதியின் எண்ணிக்கையை ஒவ்வொன்றாக அறிவிக்க தொடங்கியதும், கிட்டத்தட்ட திமுகவின் கதவு மூடிவிட்டதை எண்ணி சற்றுமுன் அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக இறுதி முடிவு எடுத்துள்ளது

இதனையடுத்து சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகிவிட்டது. தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்ற விபரம் இன்னும் சிலமணி நேரங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.