வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

ஏற்கனவே தென்கிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து 48 மணி நேரத்தில் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த இரண்டு தினங்களில் தமிழகத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

தெற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த பகுதி இன்று உருவாகியுள்ளதால், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவின் அருகிலுள்ள மத்திய பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. எனவே அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த மண்டலம் உருவாகி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக நவம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை எந்தெந்த பகுதிகளில் மழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்

நவம்பர் 23ஆம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நவம்பர் 24ஆம் தேதி நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கடலூர், மயிலாலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிக மழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் இன்று முதல் அதாவது நவம்பர் 21முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.