ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு செக் வைத்த மத்திய அரசு
- IndiaGlitz, [Friday,December 16 2016]
கடந்த மாதம் 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த அறிவிப்புக்கு பின்னர் கருப்புப்பணம் வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள் பல வழிகளிலும் தங்கள் பணத்தை வெள்ளையாக்க முயற்சித்து வரும் நிலையில் மத்திய அரசும் அதற்கு ஈடுகொடுத்து அந்த வழிகளை எல்லாம் அடைத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 9ஆம் தேதிக்கு பின்னர் அதாவது ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு மறுநாளில் இருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பான் (PAN) எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
அதேபோல் ரூ.5 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் இருப்புத்தொகை வைத்திருப்பவர்களும் பான் எண்ணை வங்கியில் சமர்ப்பித்த பின்பே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இனிமேல் புதிதாக கணக்கு தொடங்குபவர்கள் தங்கள் பான் எண்ணை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் நவம்பர் 9ஆம் தேதிக்கு பின்னர் பான் எண் இல்லாமல் டெபாசிட் செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.