கொரோனாவால் பொற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத்தொகை… முதல்வர் அதிரடி!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
கொரோனாவால் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிசெய்ய ஏற்கனவே சிறப்புப் பணிக்குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புநிதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தக் குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது இந்த வைப்புநிதி வட்டியோடு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதோடு காப்பகம், விடுதிகள் அல்லது உறவினர் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் தந்தை அல்லது தாய்க்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லம், விடுதிகளில் தங்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதோடு பட்டப்படிப்பு வரை அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணதையும் அரசே ஏற்கும் எனவும் கூறியுள்ளது.