சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Tuesday,October 16 2018]
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறிப்பாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 7 பேர்களும், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 2 பேர்களூம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 8 குழந்தைகள் உட்பட 17 பேர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சரவணன் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் ‘ஏடீஸ்’ எனப்படும் ஒரு வகை கொசு கடிப்பதன் மூலமே டெங்கு காய்ச்சல் பரவுவதால் கொசுக்கள் இல்லாத வகையில் நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.