ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி கொள்ள மேலும் ஒரு சான்ஸ்?
- IndiaGlitz, [Friday,January 27 2017]
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் அசாதாரண நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியுடன் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றிக்கொள்ள காலக்கெடுவும் முடிவடைந்தது. மேலும் மார்ச் 30 வரை இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் கிளைகளில் மட்டும் மாற்றி கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தும், வெகுதூரத்தில் இருந்து சாமானியர்கள் ரிசர்வ் வங்கிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி செல்லாத நோட்டுக்களை மீண்டும் அனைத்து வங்கிகளிலும் மாற்றிக்கொள்ள அவகாசம் தர இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், வெகுவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.