வங்கி வாசலில் வரிசையில் நின்ற தாயின் ஒரு மாத குழந்தை மரணம்
- IndiaGlitz, [Saturday,December 03 2016]
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கள்ளநோட்டு மற்றும் கருப்புப்பணம் ஓரளவு ஒழிந்து கொண்டிருந்தாலும் சாமானிய மக்கள் பெரும் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த அறிவிப்புக்கு பின்னர் வங்கி வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மரணம் அடையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் வருத்தத்திற்குரியது ஆகும்
இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் 32 நாள் குழந்தையுடன் ஒரு பெண் பணம் எடுப்பதற்காக யூனியன் வங்கியின் முன்பு வரிசையில் நின்று கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று பணம் எடுத்த பின்னர் தோளில் இருந்த குழந்தை எந்தவித அசைவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து அரை மணி நேரம் ஆகிவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கடுமையான குளிரை தாங்க முடியாமல் 32 நாள் குழந்தை மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
ரூபாய் நோட்டு பற்றாக்குறை பிரச்சனையால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றதோ என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைக்கு உடனடியாக மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.