ரூபாய் நோட்டு பற்றாக்குறை எதிரொலி: மனைவியின் பிணத்துடன் வங்கி வாசலில் கணவர்
- IndiaGlitz, [Friday,December 02 2016]
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் தடை அறிவிப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ளது. ஆனாலும் இன்னும் வங்கிக்கு போதிய அளவில் பணம் வராததாலும், ஏ.டி.எம்கள் சரியாக நிரப்பப்படாததாலும் பண நோட்டு பற்றக்குறை இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நொய்டா பகுதியில் தினக்கூலி செய்து வரும் ஒருவர் தனது மனைவியின் இறுதிசடங்கிற்கு பணம் இல்லாததால் வங்கி வாசலில் போராட்டம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த லால் என்பவரின் மனைவி நேற்று புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். மனைவியின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் எடுக்க இவரது மகன் வங்கிக்கு சென்றார். ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாததால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை
இதனால் அதிர்ச்சி அடைந்த லால், மனைவியின் பிணத்துடன் வங்கியின் வாசலில் உட்கார்ந்து போராட்டம் செய்ய ஆரம்பித்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் அரசியல்வாதி ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் லால் மனைவியின் இறுதிச்சடங்கிற்கு பணம் கொடுத்து உதவ முன்வந்தனர். ஆனால் லால் அதனை வாங்க மறுத்துவிட்டார். தனது சொந்த பணத்தில் மனைவிக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இதன்பின்னர் வங்கி அவருக்கு ரூ.15000 ஏற்பாடு செய்து கொடுத்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.