"டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்" எப்படி பரவியது...?
- IndiaGlitz, [Friday,June 25 2021]
இந்தியாவில் உள்ள டெல்டா வைரஸின், ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான், இதை டெல்டா பிளஸ் என கூறுகிறார்கள். இந்த வகையானது, தென் ஆப்பிரிக்காவில் இருந்த 'பீட்டா'-வின் உருமாற்றத்தில் இருந்த ஒன்றாகும். பீட்டா மற்றும் டெல்டா உள்ளிட்ட இரண்டுமே, உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸில் காணப்படுகின்றன.
டெல்டா பிளஸ் என்றால் என்ன?
2-ஆம் அலையின் துவக்கத்தில் இந்தியாவில் கண்டறிந்த ‘பி.1.617.1’ வைரசிற்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசிற்கு டெல்டா என்றும், உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது.
கொரோனாவின் 2-ஆம் அலையின் போது ‘ஆல்பா வைரஸ்’ (B.1.1.7.) இங்கிலாந்திலும், ‘டெல்டா வைரஸ்’ (B.1.617.2) இந்தியாவிலும் தீவிரமாக பரவியது. தற்போது புதியதாக தோன்றியிருக்கும் தொற்று டெல்டா பிளஸ் வைரஸ்’ ஆகவும், இதுவே மூன்றாம் அலைக்கு காரணமாகவும் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் உள்ள டெல்டா-வின் (K417N) மரபணு வரிசையில் ஏற்பட்ட புதிய திரிபு தான், டெல்டா பிளஸ் வைரஸ்’ (B.1.617.2.1 அல்லது AY.1) என பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய டெல்டா பிளஸ் வைரஸானது, நம் உடலில் உள்ள செல்களுக்குள், ‘ஏசிஇ2’ புரத ஏற்பிகளுடன் சேர்ந்து கூர்ப்புரதங்களுடன் நுழையும். இதன்பின் அதில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதால், கூர்ப்புரதப் பிணைப்புகள் வலுவடையும். இதனால் டெல்டா பிளஸ் மிகவேகமாக பரவும் தன்மையை பெற்றுவிடுகிறது.
டெல்டா பிளஸ் பரவியது எப்படி....?
உலகளவில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா, சீனா, நேபாளம், போலந்து, போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. தற்போது குறைவான எண்ணிக்கையில் பரவினாலும், பிற்காலத்தில் இவை அதிகமாகக் தாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸானது இங்கிலாந்தில் தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு,
இது பற்றிய அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார்கள். இதையடுத்து நேபாளத்திலிருந்து வந்த 5 நபர்களிடம் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனாவின் 2-ஆம் அலை மக்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை தந்துள்ளது. இந்தநிலையில் டெல்டா வைரஸ் தான், தற்போது 'டெல்டா ப்ளஸ்' -ஆக உருமாறியுள்ளது. சென்ற வாரத்தில் மட்டும், சுமார் 11 நாடுகளில், 197 நபர்களுக்கு இந்த வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 40-க்கும் அதிகமான நபர்களுக்கும், மஹாராஷ்டிராவில் 20-க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி, மத்தியப்பிரதேசத்தில் கொரோனவால் உயிரிழந்த ஒருவருக்கு, டெல்டா பிளஸ் வகை தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட , தடுப்பூசி செலுத்திக்கொண்ட 4 பேர் தொடரிலிருந்து குணமடைந்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
எப்படி உருமாற்றம் அடைந்துள்ளது....?
உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின், தன்மைகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
1. மிக வேகமாக பரவுவது,
2. நுரையீரலுக்கு சென்று அதன் செல்களோடு விரைவில் ஒட்டிக்கொள்ளுதல்,
3. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் குறைக்கும்தன்மை உள்ளிட்டவை இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வகை தொற்றானது விரைவில் பரவி, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துவதால், தடுப்பூசிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பை தரும் என்ற அச்சமும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.மரபணு ஆய்விற்காக தமிழகத்தில் இருந்து 1159 மாதிரிகள் அனுப்பப்பட்டு, அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளது. அதில் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பின்பற்ற வேண்டியவை....?
பொது இடங்களுக்கு செல்கையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
வீடுகள் மற்றும் நாம் அடிக்கடி செல்லக்கூடிய இடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
மூன்றாம் அலை குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்ற செய்திகள் வெளியாகி உள்ளதால், அவர்களுக்கு உடல்நல குறைபாடு இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ளலாம். சிறார்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்லாமல், பத்திரமாக காத்துக்கொள்வது பெற்றோரின் கடமையே.
கொரோனா வழிமுறைகளை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.