ஒரே ஓவர்… அத்தனை பந்துகளையும் விக்கெட்டாக மாற்றிய 16 வயது சிறுவன்!

துபாயில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஹர்ஷித் சேத் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கிளப் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தல் சாதனை படைத்துள்ளார். இந்தச் சிறுவனின் சாதனையைப் பார்த்து பல மூத்த வீரர்களும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லியில் பிறந்த ஹர்ஷித் சேத், துபாயில் உள்ள ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 16 வயதான இவர் தறேபோது (16 வயதுக்குட்பட்டோர் பிரிவில்) ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது ஒரு கிளப் போட்டியில் ஒரு ஓவருக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

துபாய் ஈடன் கார்டன் மைதானத்தில் அஜ்மான் கிரிக்கெட் கவுன்சில் சார்பாக தற்போது கர்வான் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் கிளப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் துபாய் கிரிக்கெட் கவுன்சில் ஸ்டாலெட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷித் சேத், பாகிஸ்தான் அணியான ஹைதராபாத் ஹாக்ஸ் அகாடமி ஆர்சிஜி அணியை எதிர்த்து பந்துவீசியபோது ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஷேக் ஒட்டுமொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். இதனால் 44 ரன்களுக்கு அந்த அணி தோற்றுப்போனதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்ஷித் சேத் கிரிக்கெட் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகிறார். இதனால் ஐக்கிய அமீரகத்தின் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்காக உலகக்கோப்பை அணியில் இவர் இடம்பெறுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.