கலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?! காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

டெல்லியில் நடந்து வரும் கலவரம் குறித்து இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை நடத்திய நீதிபதி முரளிதர் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறார். இந்த கலவரத்தில் டெல்லி போலீசை நீதிபதி முரளிதர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

டெல்லியில் நேற்று முதல் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கு நேற்று டெல்லி ஹைகோர்ட்டில் இரவோடு இரவாக விசாரிக்கப்பட்டது. டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்து வடகிழக்கு முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பிறப்பித்தது ஹைகோர்ட் நீதிபதி முரளிதர், ஏஜே பாம்பானி அமர்வுதான். அதோடு இந்த வழக்கை இன்று விசாரிப்போம் என்று நீதிபதி முரளிதர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி முரளிதரன் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தொடக்கத்தில் இருந்தே முரளிதர் இன்று மிகவும் கடுமையாக பேசினார். முதலில் இந்த வழக்கு முரளிதர் முன்னிலையில் விசாரணைக்கு வருவதையே மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எனக்கு வேறு வழக்கு இருக்கிறது. நான் அதில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்று எப்படியாவது வழக்கை ஒத்தி வைத்தால், நாளை அதை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி விசாரிப்பார். முரளிதருக்கு நாளை வேறு வழக்கு இருப்பதால் அவரின் அமர்வு இதை விசாரிக்காது என்று திட்டமிட்டு சொலிஸ்டர் ஜெனரல் நேரம் கேட்டு இருந்தார்.

ஆனால் உங்களால் ஆஜராகி முடிந்தால் ஆஜராகுங்கள், இல்லையென்றால் வேறு அரசு தரப்பு வழக்கறிஞரை ஆஜர் படுத்துங்கள். இன்று கண்டிப்பாக விசாரணை நடக்கும் என்று முரளிதர் உறுதியாக கூறிவிட்டார். அப்போதே மத்திய அரசை அவர் கண்டித்து இருந்தார். அதன்பின் இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

அதன்பின் மதியம் போலீஸ் கமிஷ்னர் ஆஜரான பின் நடந்த வழக்கு விசாரணையிலும் முரளிதர் கடுமையான கேள்விகளை கேட்டார். அதில், பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் போன்றவர்களின் பேச்சுகளால்தான் வன்முறை வெடித்ததாக புகார் உள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை போலீஸ் பார்த்ததா, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது. இதற்கு டெல்லி போலீஸ் தரப்பும், உள்துறை அமைச்சகம் தரப்பும் அப்படிபட்ட வீடியோக்களை பார்க்கவில்லை என்று கூறியது.

இதை கேட்ட நீதிபதி முரளிதர், நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா? உண்மையில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டனர். இதையடுத்து இன்று ஹைகோர்ட்டில் அந்த வீடியோவை ஒளிபரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்பின் துஷார் மேத்தா முன்னிலையில் இந்த வீடியோவை நீதிபதி முரளிதர் ஒளிபரப்பினார். இந்த வீடியோ ஒளிபரப்பிற்கு பின் போலீஸ், கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை கேட்டனர்.

பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார். நீதிபதி முரளிதர் பாஜக தலைவரின் வீடியோவை இப்படி ஒளிபரப்பியது பெரிய திருப்பதை ஏற்படுத்தியது.