தினகரனை தேடி வந்த டெல்லி போலீஸ். தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,April 20 2017]
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக டிடிவி தினகரனிடம் சம்மன் அளிக்க நேற்று இரவு டெல்லி போலீசார் சென்னைக்கு வந்தனர்.
டெல்லி உதவி கமிஷ்னர் சஞ்சய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திரஷா ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று தினகரனை நேரில் சந்தித்து வரும் சனிக்கிழமை விசாரணைக்காக டெல்லி வருமாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்த சம்மனையும் அவர்கள் நேரில் அளித்தனர்.
ஆனால் சம்மன் அளிக்க வந்த டெல்லி போலீசார், தினகரனை கைது செய்ய வந்திருப்பதாக வதந்தி பரவியதை அடுத்து உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் ஒருவர் தனது உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் டெல்லி போலீசார் தினகரனை கைது செய்ய வரவில்லை என்று கூறி அதிமுக நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் டெல்லி போலீசாரிடம் இருந்து சம்மனை பெற்றுக்கொண்ட தினகரன் வரும் சனிக்கிழமை டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் நேரில் விசாரணை செய்த பின்னரே அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.