படித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

இந்தியாவில் உள்ள ஒரு சில தரமான கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவருக்கு ரூ 1.45 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. 

டெல்லி ஐஐடியில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவை எதிர்கொண்டார். இந்த இன்டர்வியூவில் அவர் வெற்றிகரமாக பதில் அளித்ததை அடுத்து திருப்தி அடைந்த ஒரு முன்னணி நிறுவனம் அவரை வேலைக்கு இணைத்துக்கொண்டு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் கையில் கொடுத்து விட்டது. வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையில் சேரவுள்ளார். அவருக்கு சம்பளம் வருடத்திற்கு ஒருமுறை 1.45 கோடி என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த மாணவி மட்டுமன்றி இவருடன் படித்த இன்னும் 2 மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் மற்றும் ரூபாய் 43 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு டெல்லி ஐஐடியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ மாணவிகள் சுமார் 500 பேர்களுக்கு உலகின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், ரிலையன்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது