'ஜெயிலர்' படத்தின் அந்த காட்சியை நீக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- IndiaGlitz, [Tuesday,August 29 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நீக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.525 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ராயல் சேலஞ்ச் பெங்களூரு ஐபிஎல் அணியின் ஜெர்சியை அணிந்து ஒரு கேரக்டர் நடித்திருப்பார். அவர் பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதை அடுத்து ராயல் சேலஞ்ச் அணியின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எங்கள் அணியின் ஜெர்ஸி அணிந்து பெண்களுக்கு எதிராக பேசுவதால் எங்கள் அணியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் ’ஜெயிலர்’ படம் வெளியாகும் போதும் அந்த காட்சிகள் நீக்கபட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.