இரட்டை இலை சின்னம் யாருக்கு? டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Thursday,February 28 2019]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்ததால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின் மீண்டும் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்ததால், உண்மையான அதிமுக இதுதான் என்ற வாதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் மீண்டும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதன்பின்னர் ஓபிஎஸ் துணை முதல்வர் ஆனார்.
ஆனால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் அளித்துள்ளது.
இதன்படி ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட் செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.