பொதுநலன் வழக்கு தாக்கல் செய்த ரஜினி பட நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம்!
- IndiaGlitz, [Friday,June 04 2021]
பொதுநல வழக்கு தொடர்ந்த பிரபல நடிகைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வெளியான ரவிச்சந்திரனின் ’பருவராகம்’ ரஜினியின் ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜூஹி சாவ்லா. இவர் ஒரு சமூக செயற்பாட்டாளர் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கை சமீபத்தில் ஜூஹி சாவ்லா தாக்கல் செய்தார். 5ஜி தொழில்நுட்பம் மிகவும் அபாயகரமானது என்றும் இந்தியாவில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொழில்நுட்பம் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே 5ஜி தொழில் நுட்பம் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யும் வரை அந்த தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு முழுக்க முழுக்க விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதாக கூறி மனுத்தாக்கல் செய்த நடிகை ஜூகி சாவ்லாக்கு ரூபாய் 20 லட்சம் டெல்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. அதுமட்டுமின்றி இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடைகோரி நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.