ரூ.200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ‘பிரியாணி‘ பட நடிகை… ஜாமீன் கேட்ட நிலையில் தீர்ப்பு!
- IndiaGlitz, [Wednesday,July 12 2023]
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நடிகை ஒருவர் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அதன் மீதான தீர்ப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
இந்தி சினிமாக்களில் நடித்துவந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் இயக்குநர் ஷுஜித் சிர்கார் இயக்கத்தில் நடிகர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ் காபே’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமனார். தொடர்ந்து தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பிரியாணி’ திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்திருப்பார்.
இவர் 20க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திர சேகரின் மனைவி எனக் கூறப்படுகிறது. முன்னதாக இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.
இதைத்தவிர பல முக்கிய குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டு இருக்கும் நிலையில் இவருக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டிஸ்க்கும் தொடர்பு இருப்பதாகப் பல முறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக நடித்து நடிகை லீனா மரியா பால் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி மோசடி செய்ததாக கடந்த 2021 மே 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி தற்போது சிறையில் இருந்துவரும் இவர் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார்.
இதையடுத்து நடிகை லீனா மரியா பாலின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த கமலேஷ் கோத்தாரி, மோகன்ராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.