வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,March 30 2020]
உங்கள் வீட்டு வாடகையை நானே செலுத்துகிறேன் தயவுசெய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்றுங்கள் என்றும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேலை நிமித்தமாக டெல்லியில் இருந்துவந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி உணவின்றி தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதனை அடுத்து கால்நடையாகவே ஆயிரக்கணக்கானோர் மனைவி குழந்தைகளுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். கூட்டம் கூட்டமாக கால் நடையாய் எந்தவித முன்பாதுகாப்பும் இன்றி ஆயிரக்கணக்கானோர் நடந்து செல்வதால் கொரோனாவின் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் ‘ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைபிடித்து இப்போது எங்கே இருக்கின்றீர்களோ அதே இடத்தில் இருக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வெளிமாநில மக்களுக்கான தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன் என்றும், சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உங்களின் யாருக்காவது ஒரிருவருக்கு கொரோனா தொற்று இருந்தால்கூட அது ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே யாரும் இருக்கும் இடத்தை விட்டு சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
மேலும் வீட்டு வாடகை செலுத்த முடியாதவர்களுக்கு அரசே வீட்டு வாடகையை செலுத்தும் என்றும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோன்ற அறிவிப்பை தமிழகம் உள்பட பிற மாநில முதல்வர்களும் வெளியிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்