திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? போலீசார் தீவிர சோதனை
- IndiaGlitz, [Thursday,October 03 2019]
உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத்தலம் உள்ள திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பதி மட்டுமின்றி தலைநகர் டெல்லியிலும் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் திருப்பதியில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமிராக்களும் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளதாகவும், இரவுபகலாக சுமார் 3500 போலீசார் துப்பாகி உள்பட ஆயுதங்களுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லியிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.