பிரதமர் மோடியை அடுத்து திடீரென லடாக் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
- IndiaGlitz, [Friday,July 17 2020]
கடந்த வாரம் பிரதமர் மோடி லடாக் சென்று ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார் என்பதும், அப்போது அவர் ராணுவ வீரர்களுக்கு ஒரு திருக்குறளை கூறி ராணுவ வீரர்கள் அனைவரும் இந்த குறளை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிரதமர் மோடியை அடுத்து சற்றுமுன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் லடாக்கில் பயணம் செய்துள்ளார். லடாக் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்று லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய உள்ளதாகவும், ராணுவ வீரர்களை சந்தித்து பேச உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிக்கு நாளை மறுநாள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது
சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே லடாக்கில் மோதல் ஏற்பட்டு அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவுக்கு எதிராக செயலிகள் தடை உள்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் சீனா ராணுவத்தினருடன் 3 கட்ட பேச்சுவார்த்தையையும் இந்தியா முடித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என அடுத்தடுத்து லடாக்கில் பயணம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முன்னதாக லடாக் வந்த அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேவும் வருகை தந்துள்ளனர் என்பதும் அவர்களுக்கு லே விமான நிலையத்தில் ராணுவ அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.