கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையில் முக்கிய உத்தரவை மதுரை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது
கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டியளித்த கமல்ஹாசன் ’மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் ஊர் தான் இது’ என்று தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த இந்து அமைப்புகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பகுதியை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜராக கமல்ஹாசனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்ற நிலையில் கமல்ஹாசனுக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இல்லை என்றும் மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.