ஆஸ்கர் விழாவிற்குத் தொகுப்பாளரான இந்திய நடிகை… குஷியில் பாராட்டும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Friday,March 03 2023]
பாலிவுட் முன்னணி நடிகை ஒருவர் உலக அளவில் பிரம்மாண்ட விருதான ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். இதையறிந்த இந்திய ரசிகர்கள் பெருமையோடு அவரைப் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச அளவில் மிகவும் வரவேற்பு பெற்ற விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்நிலையில் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவானது வரும் மார்ச் 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டோலி திரையரங்கில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவினைத் தொகுத்து வழங்கும் குழுவில் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் இடம்பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 93 ஆவது ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கும் குழுவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இடம்பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தீபிகா படுகோனும் ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார். இவர் கேன்ஸ் விருதுக்கான தேர்வு குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். இந்நிலையில் ஆஸ்கர் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
95 ஆது ஆஸ்கர் விருதுக்கான தொகுப்பாளர் பட்டியல்
ஹாலிவுட் பிரபலங்கள் எமிலி பிளண்ட், சாமுவேல் எல் ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஜோ சல்டானா, ஜெனிபர் கான்னெல்லி, ரிஸ் அகமது மற்றும் மெலிசா மெக்கார்த்தி ஆகியோருடன் இந்திய நடிகை தீபிகா படுகோனும் இடம்பெற்றுள்ளார்.
95 ஆவது ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து ஷௌனக் சென்னின் ஆல் தட் ப்ரீத்” ஆவணப்படம், குனீத் மோங்காவின் “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்“ குறும்படம் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாடு” பாடலும் தேர்வுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் “நாட்டு நாடு” பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என எதிர்ப்பார்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பாடல் இதற்கு முன்பு கோல்டன் குளோப் விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி, எம்.எம்.கீரவாணி, ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.